Search This Blog

Sunday 3 July 2011

கல்வியின் சிறப்பு .

 கல்வியின் சிறப்பு

      வளைய வேண்டுமென்பதற்காக
      நெருப்பில் வாட்டினும்
      பொறுத்து - வளைகிற மூங்கில்
      வேந்தன் அமரும் பல்லக்கில்
     அவனது முடிக்குமேலே நின்று
      பெருமை கொள்ளும் !
      நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ
      கழைக்கூத்தாடிகளின் கையக்ப்பட்டு
      ஊர் ஊராய்த் திரிந்து
      அவர்தம் காலடியில் மிதிபடும் !
      இளமையிலே வருந்திக் கற்பவர்
      வளையும் மூங்கிலாய்ப் பெருமையடைவர்
      வருந்திக் கல்லாதவர்
      மிதிபடும் மூங்கிலாய்ச் சிறுமையடைவர்.
      வருத்தவன் வேய் அரசர் மாமுடியின் மேலாம்
     வருத்த வளையாத மூங்கில்- தரித்திரமாய்
     வேழம்பர்  கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
     தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.

                                                                   -நீதிவெண்பா .7
கற்கும் போது கசப்பாயும், கற்ற பின் கரும்பினை போல் சுவையாக சுவைப்பது கல்வி.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச்சமூகம் கல்வியின் மேன்மைமை
உணர்ந்த சமூகமாக விளங்கியது. கற்றாரையே மேன்மக்களாக மதித்துப் போற்றி மகிழ்ந்தது.

கல்வியில் காலூன்றி,கலை,பண்பாட்டில் மேலோங்கி நின்ற தமிழர்தம் நாகரீக வாழ்க்கை உலகையே வியக்க வைத்த வழிகாட்டி வாழ்க்கை என்பதை உணர்ந்து புகழ்ந்துள்ளனர் பிறநாட்டு வரலாற்று நல்லறிஞர்கள்.கல்வியில் பண்பட்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்ததால்தான்
அறிவில் மேலோங்கி அன்றே விளங்கியது.

    பரந்தபட்ட உலகப் பார்வையுடன்,........,,

   'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'

என்ற மனித நேயம் தோய்ந்த வேதம் படித்து உலகிற்கே வழி காட்டியது.
குணங்களால் கொள்கைகளால், பண்பட்ட வாழ்க்கை நெறிமுறைகளால்
தலை நிமிர்ந்து நின்ற தமிழ்ச் சாதி, கல்வியை எப்படி போற்றி, வளர்த்துக்
காத்து வாழ்ந்தது என்பதை விளக்கும் ஒரு புறநானுற்றுக் கவிதை,
மனதில்  பதிந்த கவிதை.

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
    பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே;
    பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
    ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
   "மூத்தோன் வருக" என்னாது, அவருள்
    அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்,
    வேற்றுமை தொ¢ந்த நாற்பாலுள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
    மேற்பால் ஒருவனும் அவன் காண்படுமே.

[கல்வி கற்பிக்கும் ஆசானை எப்படி முதலில் நாம் மதிக்க வேண்டும், அந்த
ஆசானுக்கு எத்தகைய பணிவிடை செய்து அவர் வாழ்வில் வறுமை இல்லாது
உதவிகளும் செய்து பேண வேண்டும் என்பதை உணர்த்துகிறது.]

இரண்டாவது, பெற்ற தாய்கூட கல்வியிற் சிறக்க பிள்ளையையே மதிப்பாள்,
அன்பு செலுத்துவாள் என்பதையும் தெரிவிக்கிறது. அப்படி என்றால் கல்வி
இல்லாத பெண்கள் களர் நிலம் - அந்நிலத்தில் புல் விளைவதன்றி புதல்வர்கள்
விளைவதில்லை ! என்று புரட்சி கவிஞர் பாரதிதாசனார் ஏங்கினாரே, அந்த
ஏக்கத்திற்குப் பழந்தமிழகத்தில் இடமில்லை.கல்வியை மதிக்கின்ற கல்வி கற்ற பெண்களே வாழ்ந்தார்கள் என்பது தெளிவாகிறது.

மூன்றாவததாக ஆளுகின்ற அரசனும், 'ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களில் கல்வி கேள்விகளிற் சிறந்த அறிவுடையவனே வருக"
என வரவேற்றுப் பொறுப்புகளை அளித்துப் பெருமைப் படுத்துவான் என்று வரையறை வகுக்கிறது.

நான்காவது, தொழில் முதலாகப் பிரிந்த நால்வகைப் பிரிவினுள்ளும் கல்வியிற் சிறந்த தலைமகனுக்கு மேட்டுகுடி மகன் நான் என மார்தட்டுவனும் அடங்கியவனாவான்.

எனவே, கல்வி மேம்பட்டிருந்தால் எவனுக்கும் அடிமைப்பட்டவனில்லை என்பதை கடைசி இரண்டு வரிகள் தெளிவாக்குகின்றன.
கல்வி, கேள்விகளால் தலைநிமிர்ந்து தமிழ் சமூகத்தைப் படம் பிடித்து உலகுக்குக்காட்டுகிறது மேற்குறித்த புறநானூற்று பாட்டு.