Search This Blog

Friday 5 April 2013

தமிழக வரலாற்றை மாற்றிய போர் (திருப்புறம்பியப் போர்)..

பாண்டியர்/பல்லவர் போட்டி

1. மதுரை
2. தஞ்சை
3. திருப்புறம்பியம்
4. காஞ்சி
5. திருச்சிராப்பள்ளி
6. உறையூர்
7.வஞ்சி

M - முத்தரையர்
C - சோழர்
SR - சம்புவராயர்
AD - அதியமான்
ML - மலையமான்
V - வேளிர்





விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் எதிர்காலத் திட்டமொன்றை மிகவும் தொலைநோக்குடன் போட்டிருந்தார். பாண்டிய பல்லவ ராஷ்ட்ரகூடப் பேரரசுகளின் கதி எந்தத் திக்கை நோக்கிப்போகிறது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

கிபி 250-இல் தென்னகம் வந்து கிபி 340 அளவில் தமிழகத்தில் காலூன்றிக்கொண்டுவிட்ட பல்லவர்கள் ஒரு பேரரசை நிறுவிக்கொண்டவர்கள்; பல்லவநாட்டைவிடப் பன்மடங்கு பெரிதான சாளுக்கியப் பேரரசையும் சமுத்திரகுப்தனின் சமுத்திரம்போன்ற படைகளையும் எதிர்த்து நின்று வெற்றியும் பெற்றவர்கள். அந்த பழக்க தோஷத்தினாலோ என்னவோ வருங்காலத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சிபுரிந்து பழக்கப்பட்டவர்கள் பாண்டியர்கள். பன்னெடுங்காலமாக கடற்கோள்கள், போர்கள், பஞ்சம், முதலிய பலவகையான மிரட்டல்களைச் சமாளித்தவர்கள்.

களப்பிரரை அடக்கிய பாண்டியன் கடுங்கோன் காலம் தொடங்கி நாட்டை விரிவு படுத்திக்கொண்டும் எதிர்ப்புகளைச் சமாளித்துக்கொண்டும் இருந்து பழக்கப்பட்டுவிட்ட பாண்டியர்களும் உணரவில்லை.

முன்னால் குறிப்பிடப்பட்ட பல்லவ பாண்டியப் போர்களில் கிட்டத்தட்ட அனைத்துமே பல்லவ நாட்டிற்குள் நிகழ்ந்தவை. சோழநாட்டின் வடவெல்லைக்கும் பல்லவநாட்டிற்குள்ளும் போரைக் கொண்டு சென்றவர்கள் பாண்டியர்கள். சேரநாடு, இலங்கை முதலிய இடங்களுக்குள்ளும் படைகளை அனுப்பிப் போரிட்டிருக்கின்றனர்.

பாண்டியர்கள் Agressive War புரிந்து பழக்கப்பட்டவர்கள்.

இருநூறு ஆண்டுகளில் அவர்கள் புரிந்த ஐம்பத்தேழு போர்களில் பெரும்பான்மையானவற்றில் அவர்களே வென்றிருக்கிறார்கள். அவர்கள் தாக்கப்பட்டதைவிட அவர்கள் தாக்கியதே அதிகமாகத் தெரிகிறது.

ஆகவே தங்களுடைய Aggressive Wars மூலம் ஒரு பெரும் பேரரசை ஏற்படுத்திவிடவேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

'இனிமேல் தமிழகத்தில் ஒரு பெரும் பேரரசு தோன்றுமானால் அது பாண்டியப் பேரரசுவாகத்தான் இருக்கும்; இருக்கவேண்டும்', என்று மனப்பூர்வமாக நம்பியிருந்திருக்கின்றனர். வேறுவகையாக சிந்திப்பதற்கு அவர்களின் Mind-set இடம் கொடுக்கவில்லை.

பாண்டிய பல்லவ ஆதிக்கப்போட்டியின் இறுதியான நாற்பத்தாறு ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு போர்களினால் பல்லவர்களும், ஏழு போர்களினால் பாண்டியர்களும் கை சளைத்திருந்தனர். 854-இல் நடைபெற்ற குடமூக்குப்போர் பெரும்போர். அதை அடுத்து எட்டே ஆண்டுகளில் 862-இல் நடைபெற்ற அரிசிலாற்றுப் போர்தான் இரு தரப்பினரையும் பெரிதும் பலவீனப்படுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த இடவைப் போரும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

பதினெட்டு ஆண்டுகளுக்குள்ளாக ஒரு பெரிய Show-down-ஐ இருதரப்பினரும் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

திருப்புறம்பியத்தில் பல்லவன் நிருபதுங்க பல்லவரின் சார்பாக அவர் மகன் அபராஜித பல்லவன் தலைமை தாங்கினார். அவருடைய உறவினராகிய கங்கமன்னர் பிருதிவீபதியும் அவருடைய படைகளைக் கொண்டு வந்திருந்தார். ஆதித்த சோழரின் படைகளும் சேர்ந்து பெரும் படை உருவாகியிருந்தது.

இவர்களை எதிர்த்து இரண்டாம் வரகுண பாண்டியர் தம் படைகளுடன் நின்றார்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பிருதிவீபதியின் தலைமையில் அவருடைய படைகள் பாண்டியப்படைகளின்மீது பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டன.

வரகுண பாண்டியர் ஒப்புயர்வு காணமுடியாத அளவுக்கு வீரத்தைக் காட்டினார். கங்கப்படைகளால் ஏற்படுத்தப்பட்ட பெருஞ்சேதம் அவருக்குச் சீற்றத்தை ஊட்டிவிட்டது.

போரின்போது பிருதிவீபதி ஏறியிருந்த யானையின்மீது வரகுண பாண்டியர் பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டார்.

ஆனால் பிருதிவீபதி இறக்குமுன்பே போரின் போக்கைப் பல்லவர்களுக்கு முழுமையாக சாதகமாக ஆக்கிவிட்டுவிட்டார்.

பல்லவ வெற்றி உறுதியாகிவிட்டது.

'தன் உயிரைக் கொடுத்து அபராஜிதனை அபராஜிதனாகவே ஆக்கிவிட்டார்' என்று கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு கூறுகிறது.
அபராஜிதன் - அ + பர + ஜிதன் = எதிரிகளால் வெல்லப்படமுடியாதவன்.

திருப்புறம்பியத்தில் பிருதிவீபதிக்கு பள்ளிப்படைக்கோயில் ஒன்றை எழுப்பினார்கள்.
போரில் வீத்தைக் காட்டி உயிர்துறக்கும் மன்னர்களுக்குப் பள்ளிப்படை கோயிலை எழுப்புவது அக்கால வழக்கம். இன்றும் அந்தக் கோயில் இருக்கிறது என்பார்கள்.

பாண்டியர்கள் அந்தப் போரினால் தங்களின் சாம்ராஜ்ய அந்தஸ்தை இழந்தனர்.

பல்லவர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும்கூட அவர்களும் தங்களின் வலுவை இழந்தார்கள்.

திருப்புறம்பியப் போரின் விளைவால் ஆதித்த சோழருக்குப் பெருத்த லாபமேற்பட்டது.

சோழநாடு முழுவதும், பாண்டிநாட்டின் வடபகுதி, முத்தரையரின் நாட்டின் மிச்சம் மீதாரி முதலியவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.

திருப்புறம்பியப் போர் முடிந்து இரண்டே ஆண்டுகளில் நிருபதுங்கவர்ம பல்லவர் இறந்துபோனார்.
அதே 882-ஆம் ஆண்டில் ஆதித்த சோழர் தொண்டைநாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார்.
வலிவிழந்து போன அபராஜிதவர்மர் இன்றைய ஆந்திராவின் தென்பகுதியில் இருந்த பிரதேசத்தை ஆண்டுகொண்டிருந்தார்.

ஆதித்தரின் மகனாகிய பராந்தக சோழர் அபராஜித பல்லவரை முறியடித்து பல்லவர் மேலாதிக்கத்தை இல்லாமல் செய்துவிட்டார்.

கடைச்சங்க காலத்தின் முடிவிற்குப் பின்னர் ஆறு நூற்றாண்டுகளாகத் தங்களின் சுய உரிமையை விட்டுவிட்டு, தங்களின் சொந்த நாட்டின் பெரும் பகுதியையும் முத்தரையரிடமும் பல்லவர்களிடமும் விட்டுவிட்டு சிறிய பிரதேசத்தை மட்டுமே ஆண்டுகொண்டிருந்த சோழர் குடியின் தாழ்ந்த நிலைக்குப் ஆதித்த சோழரும் பராந்தக சோழரும் பரிகாரம் தேடிக்கொண்டு பழியும் வாங்கிக்கொண்டனர்.

கி.பி 904-இல் தமிழகத்தின் பெரும்பகுதி சோழநாட்டிற்குள் வந்துவிட்டது.

பாண்டியர் அத்தனை தோல்விகண்டும் 890-இல் நடந்த இன்னொரு போரில் பெண்ணாகடத்தை அழித்தார்.

சோழர்கள் பாண்டியநாட்டைப் பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

இந்த முயற்சி கிட்டத்தட்ட பல ஆண்டுகள் நடந்து, 966-இல் சோழர்களிடம் பாண்டியநாடு சென்றது. இருப்பினும் பாண்டியர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு போராடிக்கொண்டே யிருந்தனர். ராஜராஜ சோழர் காலத்திலும் ராஜேந்திர சோழர் காலத்திலும்கூட அவர்கள் போராடினர். கடைசியில் ராஜேந்திர சோழர் காலத்தில் பாண்டிய அரச வம்சத்தை நீக்கிவிட்டு, தம் சொந்த மகன்களை 'சோழபாண்டியர்' என்ற பட்டத்தோடு பாண்டியநாட்டை ஆளுமாறு செய்தார். அவர் காலத்தில் சோழநாடு மிகபெரிய அளவில் பரந்துவிரிந்தது

No comments:

Post a Comment